Press "Enter" to skip to content

பறவைகளுக்காக நடத்தும் பாசத் தீபாவளி

மக்களை கவர்ந்துவிட்ட பட்டாசு, தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று ஒரு கிராமமே முடிவெடுத்து, அதை கண்டிப்புடன் கடைப்பிடித்தும் வருகிறது. அக்கிராமத்தை குறித்து பார்போம்…

நெல்லை:

தீபாவளி பண்டிகையில் பட்டாசு முக்கியமானதாக இருக்கிறது. திருவிழா மற்றும் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளிலும் பட்டாசுகளை வெடித்து மகிழ்வதுண்டு. சிலர் விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் பறவைகளை விரட்டுவதற்காகவும் பட்டாசுகளை வெடிப்பதுண்டு. இப்படி மக்களை கவர்ந்துவிட்ட பட்டாசு, தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று ஒரு கிராமமே முடிவெடுத்து, அதை கண்டிப்புடன் கடைப்பிடித்தும் வருகிறது.

அந்த ஆச்சரிய கிராமத்தின் பெயர் கூந்தன்குளம். இது, நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி அருகே அமைந்துள்ளது. அங்கு பிரமாண்டமான நீர்த்தேக்கம் அமைந்திருக்கிறது. அங்கு சைபீரியா, நைஜீரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் ஆண்டுதோறும் வருகின்றன. இதனால் 1994-ம் ஆண்டு கூந்தன்குளம் பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இங்கு பிளமிங்கோ எனப்படும் பூநாரைகள் அதிகமாக வரும். மேலும் உள்ளான், பட்டைத்தலை வாத்துகள், ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன் உள்பட பல்வேறு வகையான பறவைகள் வருவதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பறவைகள் வரை வந்து செல்கின்றன.

டிசம்பர், ஜனவரி மாதங்களில் வெளிநாட்டு பறவை இனங்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வரும். அவை இங்குள்ள மரங்களில் கூடுகள் கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும். பின்னர் அவற்றை பேணி பாதுகாத்து, இறக்கைகள் முளைத்து குஞ்சுகள் நன்றாக பறக்கத் தொடங்கியதும் தாயும், சேயுமாக சொந்த நாடுகளுக்கு திரும்பிச்செல்லும். அதாவது ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கிளம்புகின்றன.

நீர்த்தேக்கத்தில் உள்ள மரங்களில் கூடுகட்ட இடம் கிடைக்காத பறவைகள் அருகில் உள்ள மரங்கள், வீடுகளில் உள்ள மரங்களிலும் கூடுகளை கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள குளங்கள், கிராமங்களிலும் கூடுகள் கட்டி வசிக்கின்றன.

இங்குள்ள மக்கள் பறவைகளை தங்கள் குழந்தைகள்போல் பாவிப்பதால், ஆண்டுதோறும் இங்கு வருகிற பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. மக்களின் அன்பால் பறவைகள், வேட்டை பயமின்றி வீடுகளையொட்டி நிற்கும் மரங்களில் எல்லாம் கூடுகள்கட்டி முட்டையிட்டு குஞ்சுகளை பொரித்து வளர்க்கின்றன. வெளிநாட்டு பறவைகள் தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக வருவது போல் கூந்தன்குளத்துக்கு வந்து மகிழ்கின்றன. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக இங்குள்ள மக்கள் பறவைகளின் நலன் கருதி பட்டாசுகளை வெடிப்பதே கிடையாது. பட்டாசு வெடித்தால் மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவை இனங்கள் படபடவென சிறகுகளை அடித்து கூட்டமாக கலைந்து செல்லும். அச்சம் கொள்ளும். நிம்மதியை இழக்கும். அதனால் பட்டாசுகள் வெடிப்பதில்லை என்று கூந்தன்குளம் மக்கள் முடிவெடுத்து, முழுமனதோடு அதனை கடைப்பிடித்து வருகிறார்கள்.

பறவை மனிதர் என்று அழைக்கப்படும், கூந்தன்குளத்தை சேர்ந்த பால்பாண்டி சொல்கிறார். “சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் நிலவும். அப்போது அங்குள்ள நீர்நிலைகள் பனிக்கட்டியாக மாறிவிடுவதுடன், பறவைகளுக்கு உணவும் கிடைக்காமல் போகும். அப்போது இங்குள்ள சீதோஷ்ண நிலை இதமாக இருப்பதால், பல தலைமுறைகளாக அவை தமிழகத்திற்கு வந்து செல்கின்றன. குறிப்பாக கூந்தன்குளத்துக்கும் வந்து செல்வதால், அவற்றின் மரபணுவில் இவை பதிவாகி இருக்கும். அதன்படி துல்லியமாக தை மாதம் அமாவாசை நாளுக்குள் பறவைகள் கூந்தன்குளத்துக்கு வந்து சேர்ந்துவிடும். சரியாக அமாவாசை நாளில் முள் எடுத்து கூடு கட்டத்தொடங்கும்.

அந்த பறவைகள் கூடுகளில் இருந்து கீழே விழுந்த குஞ்சுகளை மீண்டும் சேர்த்து கொள்வதில்லை. கீழே விழுபவைகளை நாங்கள் எடுத்து சிகிச்சை அளித்து பாதுகாத்து வளர்த்து அதன் தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்போம். நாங்கள் பறவைகளை தெய்வமாக வழிபடுகிறோம். பறவைகளால் இந்த பகுதிக்கு நல்ல மழை கிடைக்கிறது” என்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »