Press "Enter" to skip to content

எத்தியோப்பியாவில் இருந்து எரித்ரியா மீது ஏவுகணை தாக்குதல் – உள்நாட்டு சண்டை இருநாட்டு போராக மாற வாய்ப்பு?

எத்தியோப்பியாவில் உள்நாட்டு சண்டை தீவிரமடைந்து வருகிறது.

அட்டிஸ் அபாபா:

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

எத்தியோப்பியாவில் டைக்ரே என்ற மாகாணம் அமைந்துள்ளது. சூடான், எரிட்ரியா ஆகிய நாட்டுகளின் எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதி தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். 

இந்த மாகாணத்தில் டைக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். மேலும், டைக்ரே மாகாணத்தை டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். 

இந்த பிரிவினர் 2018 ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். மேலும், அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலரும் 

எத்தியோப்பிய ராணுவத்தில் பெரும் பங்காற்றி வந்தனர். 

டைக்ரே மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டைக்ரே  கிளர்ச்சியாளர்கள் குழுவும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியும் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், 2018 ஆம் ஆண்டு முதல் அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் டைக்ரேயன்ஸ் எத்தியோப்பிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கப்பட்டனர். இதனால், மத்திய அரசுக்கும் டைக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.

இந்த மோதலின் உச்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டைக்ரே மாகாணத்தில் இருந்த டைக்ரேயன்ஸ் சமூகத்தின் ராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். டைக்ரே மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளையும், ஆயுதக்கிடங்குகளையும் டைக்ரேயன்ஸ் கைப்பற்றினர்.

இதனால் பயனாக டைக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. மேலும், டைக்ரேயன்ஸ் எத்தியோப்பிய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாட்டின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தை பிரதமர் அபே அகமது டைக்ரே மாகாணத்திற்க்கு அனுப்பி வைத்தார். 

அங்கு டைக்ரேயன்ஸ் சமூகத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களும், அவர்களை சார்ந்த ராணுவ பிரிவினரும் இணைந்து மத்திய படையினருக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போர் விமானங்கள் மூலமாக குண்டு வீச்சு சம்பவங்களும், ஏவுகணை தாக்குதல்களும் அரங்கேறி வருவதால் உள்நாட்டு போர் உச்சத்தை தொட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களும், மத்திய ராணுவத்தினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

உள்நாட்டு சண்டை காரணமாக டைக்ரே மாகாணம் முழுவதும் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. 

ஆனாலும், ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் மோதலில் இதுவரை 550-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டைக்ரே மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய அரசு – டைக்ரே கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக டைக்ரே மாகாணத்தில் வசித்துவந்த ஆயிரக்கணக்கான மக்கள் அண்டைநாடான சூடானுக்கு அகதிகளாக பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், எத்தியோப்பிய அரசு – டைக்ரே கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதலின் போது அண்டை நாடான எரித்ரியா மீது இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

டைக்ரே மாகாணத்தில் இருந்து அண்டை நாடான எரித்ரியாவின் தலைநகரில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்தும், துறைமுகப்பகுதிகளை குறிவைத்தும் இந்த ஏவுகணை தாக்குதல்கள்

நடத்தப்பட்டுள்ளது.

அதேபோல், டைக்ரே மாகாணத்தில் இருந்து எத்தியோப்பியாவின் அண்டை மாகாணங்கள் மீதும் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல்களை நாங்கள் தான் நடத்தினோம் என டைக்ரே மாகாண அரசின் தலைவர் தெரிவித்துள்ளார். 

ஆனாலும், டைக்ரே கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையில் எத்தியோப்பிய அரசுக்கு எரித்ரியா ராணுவ ரீதியில் உதவி செய்து வருகிறது. இதனால், இந்த ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக டைக்ரே கிளர்ச்சியாளர்கள் மற்றும் மாகாண அரசு தலைவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளதால் எத்தியோப்பியா-எரித்ரியா அரசுகள் இணைந்து டைக்ரே மாகாணத்தில் அதிரடி தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »