Press "Enter" to skip to content

ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.

கோவா:

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் நேற்று இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்தித்தது. முதல் நிமிடத்திலேயே சென்னை அணி கோல் கணக்கை தொடங்கி அட்டகாசப்படுத்தியது. அந்த அணி வீரர் இஸ்மா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் அனிருத் தபா அருமையாக அடித்து கோலாக் கினார். ஐ.எஸ்.எல். வரலாற்றில் சென்னை அணியின் அதிவேக கோல் இதுவாகும்.

25-வது நிமிடத்தில் கோல் எல்லைக்குள் வைத்து சென்னை அணி வீரர் சாங்டேவை, ஜாம்ஷெட்பூர் வீரர் ஐசக் தள்ளிவிட்டார். இதனால் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி சென்னை அணி வீரர் இஸ்மா பந்தை கோல் வளையத்துக்குள் திணித்தார். இதனால் சென்னை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து பதில் கோல் திருப்ப ஜாம்ஷெட்பூர் அணி தாக்குதல் ஆட்டத்தில் தீவிரம் காட்டியது. 37-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் ஜாக்கி சந்த் சிங் தூக்கி அடித்த பந்தை சக வீரர் வல்ஸ்கிஸ் தலையால் முட்டி அபாரமாக கோலுக்குள் அனுப்பினார். பிற்பாதியில் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் வரிந்துகட்டி நின்ற போதிலும் பல வாய்ப்புகள் மயிரிழையில் நழுவி போயின. முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி இந்த பருவத்தை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை விண்மீன் விளையாட்டு சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »