Press "Enter" to skip to content

நெருங்கி வரும் நிவர் புயல்… கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத அடைமழை (கனமழை)க்கும், உள் மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தைப் பொருத்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம். 

புயல் வலுவடைந்து வருவதால் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கிறது. கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரைதிரும்பினர். கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புயலின் நகர்வு திசையை வானிலை மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

புயல் நெருங்கி வரும் நிலையில் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலுக்கு பிறகு மீட்கப்படும் மக்களும் முகாம்களுக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. 

இதேபோல் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களை மீட்பதற்காக பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் புதுச்சேரிக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக ராணுவமும் அறிவித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »