Press "Enter" to skip to content

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்

ரஷிய தலையீடு விவகாரத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கினார்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்தாகவும், டிரம்பை வெற்றி பெற செய்ய ரஷிய அரசு வேலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஜனாதிபதி டிரம்பால் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட மைக்கேல் பிளினுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இவர் அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் செர்கெய் கிஸ்ல்யாக்கை தொடர்பு கொண்டு, ரஷியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்துக்கு விரோதமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் ரஷிய தலையீடு விவகாரம் குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வு போலீசாரிடம் மைக்கேல் பிளின் தவறான தகவல்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தால் பதவிக்கு வந்த 3 வாரங்களில் மைக்கேல் பிளின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே இது தொடர்பான விசாரணையின் முடிவில் கடந்த 2017-ம் ஆண்டு மைக்கேல் பிளின் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அமெரிக்க நீதித்துறை அவரை குற்றவாளியாக அறிவித்தது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மைக்கேல் பிளினுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உள்ளார். இதுகுறித்து டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெனரல் மைக்கேல் பிளினுக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பது எனது பெரிய மரியாதை. ஜெனரல் பிளின் மற்றும் அவரது அருமையான குடும்பத்துக்கு எனது வாழ்த்துகள். உங்களுக்கு இப்போது உண்மையிலேயே ஒரு அற்புதமான அறுவடைத்திருநாள் அமையும் என்பது எனக்கு தெரியும்” என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »