Press "Enter" to skip to content

மரடோனா மறைவு: விண்ணில் இணைந்து விளையாடுவோம் – பீலே உருக்கம்

கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான மரடோனா மறைவுக்கு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். என்றாவது ஒரு நாள் விண்ணில் இணைந்து விளையாடுவோம் என்று பீலே உருக்கமுடன் கூறினார்.

பியூனஸ் அயர்ஸ்:

கால்பந்து அரங்கின் சகாப்தமாக திகழ்ந்த அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் டியாகோ மரடோனா நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கு அறுவை சிகிச்சை செய்து வீடு திரும்பிய 2 வாரத்திற்குள் அவரது இல்லத்தில் வைத்து உயிர் பிரிந்தது.

அர்ஜென்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மரடோனாவின் மறைவையொட்டி அந்த நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சவப்பெட்டியை சுற்றி அர்ஜென்டினா தேசிய கொடியும், அவர் அணிந்த எண்10 பொறிக்கப்பட்ட சீருடையும் போர்த்தப்பட்டிருந்தது.

60 வயதான மரடோனாவுக்கு அர்ஜென்டினா மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. தனது நளினமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த மரடோனா 1986-ம் ஆண்டு உலக கோப்பையை அர்ஜென்டினாவுக்கு வென்றுத் தந்தார். அந்த உலக கோப்பை தொடரில் 5 கோல்கள் அடித்தும், 5 கோல்கள் அடிக்க உதவி புரிந்தும் அந்த உலக கோப்பையின் சிறந்த வீரருக்குரிய தங்கப்பந்து விருதை பெற்றார்.

இந்த உலக கோப்பை போட்டியின் கால்இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த இரண்டு கோல்களில் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. தலையால் முட்டி துள்ளி அடிக்க முயன்ற போது பந்தை கையால் வலைக்குள் தள்ளிவிட்டார். இதை கவனிக்காத நடுவர் கோல் என்று அறிவித்தார். ஆட்டம் முடிந்ததும் இது பற்றி பேசிய மரடோனா, ‘அந்த நேரத்தில் எனக்கு எதுவும் தெரியவில்லை. பந்தை அடித்தது கடவுளின் கையாக இருக்கும்’ என்று கூறினார். அது முதல் அந்த கோல் ‘கடவுளின் கை கோல்’ என்று வர்ணிக்கப்பட்டது. நூற்றாண்டின் சிறந்த கோலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டினா அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட போதிலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் விலகினார். நிறைய கிளப்புகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு. மரடோனாவின் திடீர் மரணம் விளையாட்டு நட்சத்திரங்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், ‘மரடோனா கால்பந்து விளையாட்டின் ஒரு மேதை. தனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும், களத்தில் மறக்க முடியாத சில மகிழ்ச்சியான தருணங்களை நமக்கு வழங்கினார். அவரது திடீர் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று கூறியுள்ளார். மரடோனாவுக்கு அதிகமான ரசிகர்களை கொண்ட கேரள மாநிலம் அவரது மறைவுக்காக இரு நாள் அரசுமுறை துக்கத்தை அறிவித்துள்ளது. 2012-ம் ஆண்டில் மரடோனா 2 நாள் பயணமாக கேரளாவுக்கு வருகை தந்து ரசிகர்களை குதூகலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சில முன்னணி விளையாட்டு பிரபலங்களின் இரங்கல் செய்தி வருமாறு:-

உலக புகழ்பெற்ற பிரேசில் முன்னாள் வீரர் 80 வயதான பீலே: இது சோகமான செய்தி. நான் சிறந்த நண்பனையும், கால்பந்து உலகம் ஒரு ஜாம்பவானையும் இழந்துள்ளது. ஒரு நாள் நானும், அவரும் விண்ணுலகில் ஒன்றாக இணைந்து விளையாடுவோம் என்று நம்புகிறேன்.

அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி: அர்ஜென்டினா மக்களுக்கும், கால்பந்து உலகுக்கும் இது சோகமான நாள். அவர் நம்மை விட்டு சென்று விட்டார். ஆனாலும் அவர் எங்களை விட்டு செல்லமாட்டார். ஏனெனில், மரடோனாவுக்கு என்றென்றும் முடிவே கிடையாது. அவருடன் செலவிட்ட அழகான தருணங்கள் என்றும் நினைவில் நிலைத்து நிற்கும்.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ: இன்று எனது சிறந்த நண்பருக்கும், இந்த உலகம் கால்பந்து மேதைக்கும் விடைகொடுத்துள்ளது. கால்பந்து விளையாட்டின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகின் நிகரில்லா வித்தகர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர்: கால்பந்தும், உலகில் உள்ள அத்தனை விளையாட்டுகளும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரை இழந்து விட்டது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி: எனது கதாநாயகன் இப்போது இல்லை. நான் உங்களுக்காகத்தான் கால்பந்து விளையாட்டை பார்த்தேன்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி: உண்மையான மேதை. கால்பந்து விளையாடிய விதத்தை மாற்றிக்காட்டியவர்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »