Press "Enter" to skip to content

சேலம் அருகே மோட்டார் மிதிவண்டி மீது அரசு பஸ் மோதல்: என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி

சேலம் அருகே மோட்டார் மிதிவண்டி மீது அரசு பஸ் மோதியதில் என்ஜினீயர் உள்பட 3 பேர் பலியானார்கள். அக்காளின் திருமணத்துக்கு என்ஜினீயர் சென்றபோது இந்த சோகம் நிகழ்ந்தது.

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகள் வான்மதி. மகன் ஜெகதீஷ் (வயது 27), என்ஜினீயர். இந்தநிலையில் ஜெகதீஷின் அக்காள் வான்மதிக்கும், பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று காலை மல்லூர் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலை தனது அக்காளின் திருமணத்திற்காக ஜெகதீஷ், தனது நண்பர்களான தொட்டில் பட்டியை சேர்ந்த மணியரசு என்பவரின் மகன் கார்த்திகேயன் (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மன்னன் என்பவரின் மகன் அஜித் என்ற பார்த்தசாரதி (20) ஆகியோருடன் மல்லூருக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆறாங்கல் திட்டு என்ற இடத்தில் உள்ள டீக்கடைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் அவர்கள் சென்றுள்ளனர். அங்கு டீ குடித்து விட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் மல்லூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதையில் திரும்பி கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை அஜித் ஓட்டி வந்தார். ஜெகதீஷ், கார்த்திகேயன் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர். சந்தியூர் பிரிவு அருகே உள்ள தனியார் பள்ளி எதிரே வந்தபோது கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், அவர்கள் சென்ற மோட்டார் மிதிவண்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் அஜித் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பலத்த காயங்களோடு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஜெகதீஷ் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து மல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்காளின் திருமணத்திற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரும், அவருடைய 2 நண்பர்களும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ஜெகதீஷின் அக்காளுக்கு நேற்று காலையில் திட்டமிட்டப்படி அவரது குடும்பத்தினரும், மணமகனின் குடும்பத்தினரும் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »