Press "Enter" to skip to content

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் முதல் கட்சி தொடக்கம் அறிவிப்பு வரை…

ரஜினிகாந்த் அடுத்தமாதம் புதிய கட்சி தொடங்கப்போவதாக நேற்று அறிவித்துள்ள நிலையில் அவரது அரசியல் பிரவேசம் அறிவிப்பு முதல், கட்சி தொடக்கம் அறிவிப்பு வரை விரிவாக பார்க்கலாம்.

சென்னை:

* 2017 டிசம்பர் 31-ந்தேதி ரசிகர்களுடனான சந்திப்பின் நிறைவில், ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடுவோம்’. ‘அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. ‘சிஸ்ட’த்தையே மாற்றவேண்டும்’ என்று பேசினார்.

* 2018 ஜனவரி 1-ந்தேதி பதிவு செய்த ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யாத ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிற மக்களையும் ஒருங்கிணைக்க ‘ரஜினி மன்றம்’ என்ற இணையதளம் தொடக்கம்.

* 2018 ஜனவரி 2-ந்தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, ‘தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்த எனக்கு ஆசை’ என்றார்.

* 2018 ஜனவரி 3-ந்தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு. ‘அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. உற்சாகமாக உள்ளது’ என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

* 2018 ஜனவரி 6-ந்தேதி ரஜினி மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றம்.

* 2018 ஜனவரி 7-ந்தேதி மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில், ‘நடிகனாக எனது வாழ்க்கை முடிந்துவிடக்கூடாது. தமிழக மக்களை நன்றாக வாழவைப்பதே எனது ஆசை’ என்று பேசினார்.

* 2018 பிப்ரவரி 24-ந்தேதி ‘அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார்.

* 2018 மார்ச் 12-ந்தேதி சென்னையில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில், ‘எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’ என்று உறுதியாக கூறினார்.

* 2018 ஏப்ரல் 8-ந்தேதி ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாகும்’ என்ற கருத்தை ரஜினிகாந்த் முன்வைத்தார்.

* 2018 மே 9-ந்தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், ‘நதிகளை இணைப்பதே என் கனவு, தமிழகத்துக்கு விரைவில் நல்லநேரம் வரும்’ என்று பேசினார்.

* 2018 மே 30-ந்தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்தார்.

* 2018 நவம்பர் 14-ந்தேதி ‘பா.ஜ.க. எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி’ என்று ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டியளித்தார்.

* 2019 பிப்ரவரி 17-ந்தேதி ‘சட்டசபை தேர்தல்தான் எங்களது இலக்கு, பாராளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை’ என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

* 2019 நவம்பர் 22-ந்தேதி ‘2021-ம் ஆண்டு தேர்தலில் அற்புதம் நிகழும்’ என நிருபர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

* 2020 ஜனவரி 22-ந்தேதி ‘பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது’ என்று ரஜினிகாந்த் நிருபர்களிடம் தெரிவித்தார்.

* 2020 பிப்ரவரி 6-ந்தேதி ‘குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை’ என்று ரஜினிகாந்த் கூறினார்.

* 2020 மார்ச் 13-ந்தேதி சென்னையில் நட்சத்திர ஓட்டலில் ரஜினிகாந்த் நிருபர்களிடம், ‘கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை, முதல்-அமைச்சர் ஆகமாட்டேன்’ என திட்டவட்டமாக கூறினார்.

* அதன் பின்னர் கொரோனா காலத்தில் எந்தவித அறிவிப்போ, பேட்டியோ இல்லை.

* 2020 நவம்பர் 30-ந்தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அரசியலுக்கு வருவாரா? கட்சி தொடங்குவாரா? என்பது பற்றி விரைவில் தெரிவிப்பேன் என்று கூறினார்.

* 2020 டிசம்பர் 3-ந்தேதி (நேற்று) ஜனவரியில் கட்சி தொடக்கம். 31-ந்தேதி அதுபற்றி அறிவிக்கிறேன் என டுவிட்டரில் கூறியுள்ளார்.

2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ‘அரசியலுக்கு வருவது உறுதி’ என்று கூறிய ரஜினிகாந்த், 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வருகிற 31-ந்தேதி கட்சி தொடக்கம் எப்போது என்பது பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »