Press "Enter" to skip to content

சபரிமலை கோவிலில் மாத பூஜை நாட்களை அதிகரிக்க பரிசீலனை

வருமான இழப்பை ஈடுசெய்ய சபரிமலை கோவிலில் மாத பூஜை நாட்களை அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

சபரிமலை :

திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு சபரிமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை வருகிற 14- ந் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் திருவிதாங்கூர் தேவஸ்தானம் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. கொரோனா காரணமாக, நடப்பு பருவம் ஆரம்பத்தில் சபரிமலை தரிசனத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

மகர விளக்கை முன்னிட்டு தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் கடந்த ஆண்டை விட வருமானம் மிகவும் குறைவாக உள்ளது.

சபரிமலையில் தினசரி செலவுகளை கூட நிறைவேற்ற முடியாத அளவில் வருமானம் தலைகீழாக சரிந்து உள்ளது. இந்த நிலையில் கேரள அரசு ரூ.70 கோடி தேவஸ்தானத்திற்கு மானியமாக தந்து உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி சபரிமலையில் அன்றாட செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே தேவஸ்தானத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் வருமான இழப்பை ஈடு செய்ய எதிர்காலத்தில் கொரோனா முழு தளர்வுக்கு பிறகு மாத பூஜை நாட்களை அதிகரிக்க பரிசீலனை நடந்து வருகிறது. அதாவது, சபரிமலையில் மாத பூஜை நாட்களை 5 நாட்களுக்கு பதிலாக 10 நாட்கள் கோவில் நடையை திறப்பது குறித்து சபரிமலை தந்திரியுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று வாசு தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »