Press "Enter" to skip to content

போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்

போராட்டத்தை கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது என்று ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது நான் அரசியலுக்கு வருவது உறுதி. வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நம் படை களத்தில் இருக்கும் என்று கூறினார். இதனையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதன் பிறகு தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளால் அரசியல் ஆர்வத்தை தூண்டிய ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தை முடித்து விட்டு அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்தார். ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கொரோனா பரவியதையடுத்து ரஜினியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், கட்சி தொடங்க மாட்டேன் என்றும் கூறி இருந்தார்.

இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது வீட்டு முன்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் நேற்று நுங்கம்பாக்கத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தன்னை அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்த வேண்டாம் என்று கூறி இன்று உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்களுக்கு… நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.

தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.

தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »