Press "Enter" to skip to content

நாளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – காளைகளை அடக்க காளையர்கள் தயார்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது. காளைகளை அடக்க காளையர்கள் தயாராக உள்ளனர்.

மதுரை:

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான நாளை (14-ந் தேதி) அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு வகுத்து தந்துள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜல்லிக்கட்டின் போது மாடு உரிமையாளர்களுடன் 4 பேருக்கு அனுமதி தரப்படும். ஆனால் இப்போது மாடு உரிமையாளருடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்றும், அவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 430 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் இதுவரை 367 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யாமல் இருப்பவர்கள், தாங்களாகவே பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் தான் அவர்களும் ஜல்லிக்கட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதே போல் ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கட்டாயம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். வெப்பம் அதிகம் இருந்தால் ஜல்லிக்கட்டு போட்டியை காண முடியாது. கை சுத்தகரிப்பான் மூலம் கையை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் தயார் நிலையில் உள்ளன. மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக தரையில் வைக்கோல்கள் பரப்பப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை காலை சரியாக 8 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கும். தற்போதைய நிலவரப்படி 430 வீரர்கள், 788 காளைகள் ஜல்லிக்கட்டில் களம் காண இருக்கின்றன. இருந்தாலும் கொரோனா சான்றிதழ் இல்லாதவர்கள் களத்தில் இறங்க அனுமதி கிடையாது. எனவே இந்த எண்ணிக்கையில் மாற்றம் வரலாம். மேலும் சுற்றுவாரியாக மட்டுமே வீரர்கள் களமிறக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம். முகக்கவசம் இல்லாவிட்டால் அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு முகாமிட்டுள்ளது. காளைகளுக்கு சிகிச்சை தரவும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல் துறையினர், சுகாதாரத்துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து செய்துள்ளனர்.

15-ந்தேதி பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்காக அங்குள்ள வாடிவாசல், பார்வையாளர்கள் மேடை ஆகியவை தயார் நிலையில் உள்ளது. இங்கு 651 வீரர்கள் களம் இறங்க பதிவு செய்துள்ளனர். 783 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

16-ந்தேதி அலங்காநல்லூரில் கோட்டை முனிசாமி திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இங்கு களமிறங்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 655 மாடு பிடிவீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »