Press "Enter" to skip to content

தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

நெல்லை:

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அடைமழை (கனமழை) பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இந்த 2 அணைகளும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்றும் அடைமழை (கனமழை) பெய்தது. இதனால் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று அதிகாலை அணைக்கு வினாடிக்கு 3,161 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்ததால் மதியம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அணையின் 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இதேபோல் பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து காலையில் 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், மாலையில் கூடுதலாக 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டு உள்ளதால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.மேலும் மணிமுத்தாறு பிரதான கால்வாய்கள் வழியாகவும் வினாடிக்கு 455 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாபநாசம் கோவில் முன்பு உள்ள படித்துறை, பிள்ளையார் கோவில், சுவாமி மண்டபம் ஆகியவற்றை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. .

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோவிலின் கோபுரம் பகுதி மட்டும் வெளியே தெரிகின்ற அளவிற்கு அதிக அளவில் வெள்ளம் செல்கிறது.

மேலும் விக்கிரமசிங்கபுரம், அம்பை, பாபநாசம், கடையம், ஆழ்வார்குறிச்சி, நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருவதால் ஆற்றில் வினாடிக்கு சுமார் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இரு கரைகளை தொட்டப்படி வெள்ளம் பாய்ந்து செல்கிறது.இதனால் தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று மாலை நெல்லை வந்தனர். மீட்பு குழுவைச் சேர்ந்த நந்தகுமார் தலைமையில் சுமார் 50 பேர் அடங்கிய 2 குழுவினர் வந்துள்ளனர்.

அவர்கள் மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகு, டயர், துடுப்பு, கயிறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் வந்து உள்ளனர். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »