Press "Enter" to skip to content

ராஜஸ்தானில் மின்சாரம் பாய்ந்து பஸ் தீ பிடித்ததில் 6 பக்தர்கள் பலி

ராஜஸ்தானில் மின்சாரம் பாய்ந்து பஸ் தீப்பிடித்ததில் 6 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம், நகோடா என்ற இடத்தில் ஒரு சமண கோவில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் சென்று வழிபட்டு விட்டு சுமார் 40 பக்தர்கள் ஒரு தனியார் பஸ் மூலம் அஜ்மீரில் உள்ள பீவாருக்கு திரும்பிச்சென்று கொண்டிருந்தனர்.

அந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் திடீரென பாதை மாறி, பஸ்சை அங்குள்ள மகேஷ்புரா கிராமப்புறத்தில் செலுத்தியபோது, மேலே தொங்கிக்கொண்டிருந்த ஒரு மின்சார வயர் பஸ் மீது பட்டது. இதில் பஸ் மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது. இதையறிந்த பயணிகள் அலறித ்துடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 6 பக்தர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் ஜோத்பூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் ஜலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம், அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடியும், மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தியில், ராஜஸ்தானில் நடந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தோர் விரைவில் குணம் அடைய விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »