Press "Enter" to skip to content

குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆசிரியர்கள் கூறும் கருத்துகள் என்ன?

10, 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது என்பது சிரமமான விஷயம் என ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சென்னை:

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழு பாடங்களையும் அவர்கள் கற்றுக்கொள்வது சிரமம் என்பதை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பை நேற்று முன்தினம் அரசு வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தமாக இவ்வளவு பாடத் தலைப்புகள் குறைப்பு என்று இல்லாமல், பாடப்பிரிவுகளில் இருக்கும் பாடத்தலைப்புகளின் உட்பகுதிகளில் சிலவற்றையும், மேலும் உயர்கல்வி படிப்புக்கு தேவை என கருதி சேர்க்கப்பட்டு இருந்த பாடங்களின் உட்பகுதிகள் சிலவற்றையும் தான் குறைத்து இருக்கின்றனர். மொத்தத்தில் மாணவர்களின் கற்றல் விளைவுகளில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் பாடக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறைக்கப்பட்டு இருக்கும் பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா?, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவுறுத்தலின்படி நேரம் இருந்தால் கூடுதல் பாடங்களையும் நடத்த முடியுமா?, மாணவர்கள் அதனை எளிதில் கற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

இந்த அளவுக்கு பாடங்கள் குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான். ஆனால் பொதுத்தேர்வு சற்று தாமதமாக தொடங்கினால் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பது என்பது சாத்தியப்படும். இல்லையென்றால் குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது சிரமம்.

கடினமான பாடங்கள் எதையும் நீக்கவில்லை. எளிதாக மாணவர்கள் மதிப்பெண் எடுக்கக்கூடிய சில பாடங்களை நீக்கி இருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு. மாணவர்களுக்கு எது கஷ்டமோ? அதை குறைக்காமல், மற்றவற்றை குறைத்து இருக்கிறார்கள்.

குறுகிய நேரத்தில் பாடங்களை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வது என்பது கடினம். ஓரளவுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவற்றை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஏற்கனவே கணினிமய மூலம் பாடத்திட்டங்களை ஓரளவு நெருங்கிவிட்டார்கள். அவர்களை பொறுத்தவரையில் இந்த பாடக்குறைப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »