Press "Enter" to skip to content

பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை

பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு நிதி உதவிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

புதுடெல்லி:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

நேற்று மதியம் சென்னையில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோரும் சென்றனர்.

டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் தங்கிய அவர், முதல் நிகழ்ச்சியாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு, 8.40 வரை நீடித்தது. அப்போது நிவர், புரவி புயல்கள் பாதிப்புக்கான நிவாரணம், நிரந்தர கட்டமைப்பு மேம்பாட்டு நிவாரணம் போன்றவற்றை வழங்கும்படி அமித்ஷாவிடம் கேட்டுக்கொண்டார்.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும் இடம்பெற்றுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

அந்த கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்று ஏற்கனவே அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

எனவே கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் பேசியதாகவும் தெரிகிறது.

அப்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை பா.ஜனதாவுக்கு தரும்படி எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா கேட்டுக் கொண்டார். அது பற்றியும் அவர்கள் விவாதித்துள்ளனர். இதில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு, கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 10.30 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு நிதி உதவிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம், நடந்தாய் வாழி காவிரி திட்டம், காவிரி படுகை சுத்தப்படுத்துதல் திட்டம் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இத்துடன் நிவர், புரவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் மனு கொடுத்தார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு துறைகளின் கீழ் தர வேண்டிய ரூ.19 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டுக்காக ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு நிதி தர வேண்டி உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சென்னையில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையிலான மெட்ரோ தொடர் வண்டி திட்டப்பணி நிறைவடைந்துள்ளது. இதே போல தூத்துக்குடி எரிவாயு திட்டமும் நிறைவடைந்திருக்கிறது. 2 திட்டங்களையும் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.

மேலும் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம், கீழ்பவானி நவீனப்படுத்தும் திட் டம், கல்லணை புனரமைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும்படியும் கேட்டுக் கொண்டார்.

கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் வற்புறுத்தினார்.

இதன்பின்னர் அரசியல் ரீதியாகவும் அவர்கள் பேசினார்கள். தமிழக சட்டசபை தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திப்பது தொடர்பாக விவாதித்தனர்.

அப்போது அமித்ஷாவுடன் நேற்று கூட்டணி தொடர்பாக பேசியது குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர். இதில் பா.ஜனதாவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது பற்றி இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த சந்திப்பு முடிந்ததும் டெல்லியில் கட்டப்பட்டு வரும் அ.தி.மு.க. அலுவலக கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் தமிழக அரசு இல்லத்திற்கு திரும்பி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை 5.10 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். இரவு 8 மணிக்கு அவர் சென்னை வந்தடைகிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »