Press "Enter" to skip to content

பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது- ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து

பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆசிரியர்களும், மாணவிகளும் தெரிவித்தனர்.

சென்னை:

10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி ஆசிரியர்கள், மாணவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

12-ம் வகுப்பு ஆசிரியை எழிலரசி:-

பல நாட்களுக்கு பிறகு பிள்ளைகளை நேரடியாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால், பாதுகாப்புடன் மாணவர்கள் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கிறோம். மனிதர்களுக்கு மாற்றாக எந்திரங்கள் எப்போதும் சரியாக இருக்காது. அதேபோல் தான் நேரடி வகுப்புகளுக்கு மாற்றாக கணினிமய வகுப்புகளும் இருக்காது. அரசு குறைத்திருக்கும் பாடத்திட்டங்களை மாணவ-மாணவிகளுக்கு இந்த குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது சவாலாகத் தான் இருக்கும்.

10-ம் வகுப்பு மாணவி தீபிகா:-

எனக்கு கைபேசி இல்லாததால் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ஆசிரியர்களிடம் நேரடியாக சந்தேகத்தை நிவர்த்தி செய்து படிக்கும் அனுபவம், இணையத்தில் கிடைப்பதில்லை. நேரடி வகுப்புகள்தான் சிறந்தது

12-ம் வகுப்பு மாணவி லக்‌ஷா:-

மற்ற அனைத்து பாடப்பிரிவுகளையும் வீட்டில் இருந்து கணினிமய மூலமாக கற்றுக்கொள்ள முடியும். ஆனால் கணித பாடத்தை அப்படி கற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டு ஆசிரியர்களின் தக்க ஆலோசனைகளை பெற்று கற்றுக்கொண்டால்தான் அதில் மதிப்பெண் எடுக்கமுடியும். அந்தவகையில் எனக்கு இப்போது பள்ளிக்கு வருவது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

10-ம் வகுப்பு ஆசிரியை உமா மகேஸ்வரி:-

குழந்தைகளை பார்க்க முடியாமல் தவித்தோம். தற்போது பள்ளிகள் திறப்பு மூலம் அவர்களை பார்ப்பதில் கிடைத்த சந்தோஷத்தை அளவிடமுடியாது. கணினிமய மூலம் பாடம் நடத்தியது மாணவ-மாணவிகளுக்கு முழுவதுமாக போய்ச்சேரவில்லை. எனவே நேரடி வகுப்புகள்தான் எப்போதும் சிறந்தது. நேரடியாக பாடம் நடத்துவதுபோன்ற அனுபவம் வேறு எதிலும் ஆசிரியருக்கு கிடைக்காது. எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்துக்குள் பாடத்திட்டங்களை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம்.

12-ம் வகுப்பு மாணவி அஸ்வினி:-

கணினிமய மூலம் படித்தது மனதில் நிற்கவில்லை. நேரடி வகுப்புகள் மூலம்தான் பாடங்களை கற்பது எளிதாக இருக்கும். நண்பர்களை வெகுநாட்களுக்கு பிறகு பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பொதுத்தேர்வுக்கு இன்னும் குறுகிய நாட்கள் தான் இருக்கிறது. நல்ல முயற்சி எடுத்து படித்து தேர்வில் வெற்றி பெறுவேன்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »