Press "Enter" to skip to content

ராணுவ ரகசியங்களை வெளியிடுவது தேசத்துரோகம் – முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி

ராணுவ ரகசியங்களை வெளியிடுவது தேசத்துரோகம் என்று முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கூறினார்.

புதுடெல்லி:

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் 2019-ம் ஆண்டு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானின் பாலக்கோட்டுக்கு சென்று, அங்கிருந்த பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு போட்டு அழித்தன. இந்த தாக்குதலில் பல நூறு பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இது தொடர்பான ரகசியங்களை கசியவிடும் வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி நடத்திய ‘வாட்ஸ் அப்’ உரையாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் முன்னாள் ராணுவ மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏ.கே. அந்தோணி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது:-

2019-ம் ஆண்டு பாகிஸ்தான் பாலக்கோட்டில் இந்தியா நடத்திய வான்தாக்குதல்கள் குறித்த தகவல் கசிந்தது தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ராணுவ நடவடிக்கைகள் பற்றிய அதிகாரப்பூர்வ ரகசியத்தை கசியவிடுவது என்பது தேச பாதுகாப்பு தொடர்பான விவகாரம் மற்றும் தேசத்துரோகம் ஆகும்.

இப்படி ராணுவ ரகசியத்தை கசிய விட்டவர் யாராக இருந்தாலும், அவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் கருணை காட்டுவதற்கு தகுதி அற்றவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »