Press "Enter" to skip to content

சசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை- மருத்துவமனை நிர்வாகம் தகவல்

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு நடத்தப்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர். சோதனையில் அவருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை கடந்த 2020-ம் ஆண்டு செலுத்தினார். இதையடுத்து தண்டனை காலம் முடிவடைவதையொட்டி சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் கடிதம் அனுப்பி இருப்பதாக அவரது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறினார்.

இதனால் தான் விடுதலை ஆகப்போகும் தினத்தை சசிகலா ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவர் அவதிப்பட்டதை அடுத்து அவருக்கு முதல் கட்டமாக சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அவருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு அதிகமாக இருப்பதை அடுத்து, நேற்று மாலை 5.45 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் உதவூர்தி மூலம் பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆம்புலன்சில் இருந்து இறங்கிய அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து போலீசாரும், மருத்துவ ஊழியர்களும் ஆஸ்பத்திரிக்குள் அழைத்து சென்றனர். அப்போது அவர் நல்ல நிலையில் இருந்ததை பார்க்க முடிந்தது.

அங்கு தண்டனை கைதிகளுக்கான வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் அறிகுறி தென்படுவதால் சசிகலாவிற்கு நடத்தப்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர். சோதனையில் அவருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருப்பது தெரியவந்தது. இருப்பினும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருப்பதாகவும், இதனால் மூச்சுத்திணறல் அவருக்கு ஏற்பட்டு வருவதாகவும், எனவே அதற்காக அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. சசிகலாவிற்கு தற்போது மூச்சு திணறல் குறைந்துள்ளது. 2 அல்லது 3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »