Press "Enter" to skip to content

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை

பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு முதலில் 20 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அதன்பின்னர், அதன் கிளைகளாக செயல்படும் பாரிமுனை, வானகரத்தில் இருக்கும் ஜெபகோபுரம் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இது தவிர சென்னை அடையாறு ஜீவரத்தினம் நகரில் உள்ள பால் தினகரனின் இல்லத்திலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது. மேலும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பள்ளிகளில் ஏராளமான அதிகாரிகள் காரில் வந்து சோதனையை மேற்கொண்டனர்.

அந்த வகையில் காருண்யா பல்கலைக்கழகம், பள்ளிகள், நிறுவனங்கள் என மொத்தம் 28 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

3 இடங்களில் சோதனை முடிந்த நிலையில் சென்னை அடையாறு, பாரிமுனை உள்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.

கோவை காருண்யா பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »