Press "Enter" to skip to content

அழைப்பிதழ் இருந்தால்தான் அனுமதி : டெல்லி குடியரசு தின விழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை டெல்லி போலீசாா் விதித்துள்ளனர். தண்ணீர் பாட்டில், குடை கொண்டுவர தடை விதித்துள்ளனர்.

புதுடெல்லி:

நாட்டின் குடியரசு தினத்தையொட்டி, வழக்கம்போல் ஜனவரி 26-ந் தேதி டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. ஆனால், கொரோனா காலம் என்பதாலும், டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருப்பதாலும் இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அமல்படுத்தப்பட உள்ளன.

ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ரோந்து பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் காரணமாக, டெல்லி எல்லை பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சுதந்திர தினத்தை போலவே, சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் போடப்படுகின்றன. பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து டெல்லி காவல் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட எல்லோரையும் அனுமதி்க்கும் வழக்கம் இந்த ஆண்டு கிடையாது. உரிய அழைப்பிதழ் அல்லது அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

பார்வையாளர்கள், பை, சிறிய பெட்டி, பின், உணவு பொருட்கள், ஒளிக்கருவி (கேமரா), பைனாகுலர், கையடக்க ஒளிக்கருவி (கேமரா), ஐபாட், கணிப்பொறி, மடிக்கணினி, டேப்லெட், பவர்பேங்க், கணினி மயமான டைரி, ரிமோட் கண்ட்ரோல் தேர் சாவி ஆகியவற்றை கொண்டுவரக்கூடாது.

தண்ணீர் பாட்டில், குடை, கத்தி, வாள், ஸ்க்ரூ டிரைவர், கத்தரிக்கோல், ரேசர், பிளேடு, பொம்மை துப்பாக்கி, சிகரெட், பீடி, ஆல்கஹால், தீப்பெட்டி, சிகரெட் லைட்டர், தெர்மோ பிளாஸ்க், வெடிபொருட்கள், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள், பட்டாசுகள், நறுமண தெளிப்பான்கள் ஆகியவற்றை கொண்டுவரக்கூடாது.

இவ்வாறு டெல்லி காவல் துறையினர் கூறியுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »