Press "Enter" to skip to content

அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்

அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு பொருளாதார பெண் வல்லுநரான ஜேனட் ஏலனை (வயது 74) ஜோ பைடன் நியமித்தார்.

இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். செனட் சபையில் தற்போது ஜனநாயக கட்சிக்கு 50 உறுப்பினர்கள் குடியரசுக் கட்சிக்கு 50 உறுப்பினர்கள் என சரிசமமான நிலை உள்ளது. செனட் சபையின் தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சபையில் நடக்கும் ஓட்டெடுப்பில் ஜனநாயக கட்சியின் முடிவுக்கு ஆதரவாக தனது வாழ்க்கையை அளிப்பார். இதனால் செனட் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டுவரும் தீர்மானம், மசோதா உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் சிக்கலின்றி எளிதாக நிறைவேறும் சூழல் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க நிதி மந்திரியாக ஜேனட் ஏலனை நியமிப்பது தொடர்பாக செனட் சபையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடந்தது. சபையின் தலைவரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தலைமையில் நடந்த இந்த வாக்கெடுப்பில் ஜேனட் ஏலன் நியமனத்துக்கு ஆதரவாக 84 உறுப்பினர்களும், எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜேனட் ஏலனை அமெரிக்க நிதி மந்திரியாக நியமித்து செனட் சபை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றிலேயே நிதி மந்திரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையை ஜேனட் ஏலன் பெறுகிறார். அவர் விரைவில் முறைப்படி பதவி ஏற்பார்.

அமெரிக்காவின் பிரவுன் மற்றும் யேழ் பல்கலைக்கழகங்களில் பொருளாதார பட்டப்படிப்புகளை முடித்த ஜேனட் ஏலன், உலகின் பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக இருந்தபோது, இவரின் திறமை அறியப்பட்டது. அமெரிக்காவில் வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது, இவரின் கொள்கைகள், திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவின.

அமெரிக்க மத்திய மைய கட்டுப்பாட்டு வங்கியின் நிர்வாகக் குழுவில் 1994 முதல் 1997-ம் ஆண்டுவரை ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக கிளிண்டன் இருந்தபோது, அவரின் பொருளாதார ஆலோசகராக ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார்.

2004 முதல் 2010-ம் ஆண்டுவரை சான்பிரான்சிஸ்கோ மத்திய மைய கட்டுப்பாட்டு வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார்.

அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சிறப்படைய ஜேனட் ஏலனின் வழிகாட்டுதல்கள், நிதிக்கொள்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்று செனட் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட்ட ஜோ பைடனின் 3-வது மந்திரி சபை உறுப்பினர் ஜேனட் ஏலன் ஆவார். இதற்கு முன் தேசிய உளவுத்துறை இயக்குநராக அவ்ரில் ஹையின்சும், ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டினும் நியமிக்கப்பட்டனர். உள்துறை மந்திரியாக டோனி பில்கினை நியமிப்பதற்கு செனட்சபை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று தெரிகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »