Press "Enter" to skip to content

இந்த ஆண்டின் முதல் கூட்டம் – தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த  கூட்டம் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலேயே, இம்முறையும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கும். அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அதனை சபாநாயகர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து கூறுவார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளுநர் உரையில் கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பு முக்கியமாக இடம் பெறும் என்று கருதப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்தும், வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது.

ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டம் நிறைவடையும். அதன்பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது?

ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு எத்தனை நாட்கள் அனுமதிப்பது? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். இதனை சபாநாயகர் முறைப்படி அறிவிப்பு வெளியிடுவார்.

சட்டசபை கூட்டம் 3 அல்லது 4 நாட்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சட்டசபை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் இந்த மாத இறுதியில், அதாவது 22-ந்தேதி தாக்கல் செய்யப்படலாம் என்று தலைமை செயலக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »