Press "Enter" to skip to content

சீனாவில் போலி கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து விற்பனை

சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்றுவந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பீஜிங்:

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் ‘சினோபார்ம்’ நிறுவனத்தின் இரு வெவ்வேறு பிரிவுகள் தயாரித்துள்ள 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கும் சீனா வழங்கி வருகிறது.‌

இந்த நிலையில், சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்றுவந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கும்பல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே இதுபோன்ற போலி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, விற்று வந்தது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த கும்பல் போலி கொரோனா தடுப்பூசிகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடத்தியதாகவும் தெரிகிறது.

தடுப்பூசி தொடர்பான குற்றங்களை தடுப்பதற்காக சீனா அமைத்துள்ள சிறப்பு காவல் துறை படை தலைநகர் பீஜிங் மற்றும் கிழக்கு மாகாணங்களான ஜியாங்சு மற்றும் ஷான்டாங்கில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் இதுவரை 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலியான கொரோனா தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலி தடுப்பூசிகள் உற்பத்தி மற்றும் கடத்தலுக்கு எதிராக அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.

இதுபோன்ற குற்றச் செயல்களைத் தவிர்க்க மற்ற நாடுகளின் ஒத்துழைப்பும் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த மாதத் தொடக்கத்தில் கடத்தப்பட்ட சீன தடுப்பூசிகள் நாட்டில் புழக்கத்தில் இருப்பதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், ஆனால் இந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறாக வழிநடத்த கூடியவை என்று கூறி ஜப்பான் ஊடகங்களை சீனா கண்டித்ததும் நினைவுகூரத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »