Press "Enter" to skip to content

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்றும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை :

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* இந்தியாவில் வேளாண்மை தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் கொண்டு செல்ல வழிவகுக்கும் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

* 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கொடூரமாக கொலை செய்துள்ளது. எனவே மத்திய அரசு இலங்கை அரசு மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

* தமிழக விவசாயிகளின் விவசாய கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

* அ.தி.மு.க. ஆட்சியில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் காரணமாக அனைத்துத்துறைகளிலும் ஊழல் புற்றுநோய் பரவி உள்ளது. ஊழல் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதையும் இக்கூட்டம் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது.

* மத்திய பா.ஜ.க. அரசு, காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு வஞ்சகம் இழைத்தது போலவே, தென்பெண்ணை ஆற்றுப் பிரச்சினையிலும் கேடு செய்து வருகிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டிய அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. அரசின் பாதம்தாங்கியாக செயல்படுவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

* பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வார கால அவகாசம் முடிந்த பின்னரும், தமிழக ஆளுநர் முடிவு எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருவதற்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், அவர்களை விடுதலை செய்திட ஆளுநர் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

* தி.மு.க.வின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது போன்று, அதே நிலை தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக இருந்து வருகிறது.

* மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்து வருகிறது. என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டு பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையேல் அந்த. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »