Press "Enter" to skip to content

பெங்களூருவில் இந்திரா உணவகங்கள் மூடப்படும் அபாயம்

பெங்களூரு நகரில் ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட மலிவுவிலை இந்திரா உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு :

பெங்களூரு நகரில் ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மலிவுவிலை இந்திரா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இங்கு ரூ.5-க்கு காலை சிற்றுண்டியும், மதியம் மற்றும் இரவு உணவு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரு நகரில் மொத்தமுள்ள 198 வார்டுகளிலும் இந்திரா உணவகங்கள் இயங்குகின்றன. இது தவிர நடமாடும் இந்திரா உணவகங்களும் இயங்குகின்றன.

இந்த உணவகங்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி அப்போதைய முதல்-மந்திரி சித்தராமையாவால் தொடங்கிைவக்கப்பட்டன. மேலும் இந்திரா உணவகங்கள் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு நகரில் நடமாடும் உணவகங்கள் தொடங்கப்பட்டன. இந்த உணவகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் சிற்றுண்டியை நம்பி பெரும்பாலான வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த உணவகங்களுக்கான நிதியை அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்ற நிர்வாகங்கள் ஒதுக்கீடு செய்கின்றன. அதன்படி பெங்களூருவில் இயங்கிவரும் இந்திரா உணவகங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து வந்தது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த 10 மாதங்களாக இந்திரா உணவகங்கள் நடத்துவதற்காக ஒதுக்க வேண்டிய ரூ.22 கோடியை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், பெங்களூரு நகரில் இயங்கிவரும் இந்திரா உணவகங்கள் விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் இந்திரா உணவகங்களுக்கு ஒதுக்கவேண்டிய நிதி ரூ. 22 கோடி ஒதுக்காதது குறித்து மாநகராட்சியின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பசவராஜ் நேற்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் மாநகராட்சி நிர்வாக அதிகாரி கவுரவ் குப்தா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், வறுமையில் உள்ளவர்களின் பசியை போக்கவே இந்திரா உணவகங்கள் தொடங்கப்பட்டன. எனவே, இந்த உணவகங்களை மூடாமல் தொடர்ந்து இயங்க நிலுவைத்தொகையை உடனே விடுவிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »