Press "Enter" to skip to content

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு – சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க வீரர்கள் உள்ளே நுழைந்தனர்

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்க மீட்புப்படையினர் சுரங்கத்துக்குள் நுழைந்தனர். தொழிலாளர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை அறிய ‘டிரோன்’கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல், நீர்மின் நிலையங்கள் பெருத்த சேதம் அடைந்தன.

தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி, கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இதுவரை 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் 174 பேரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, இந்தோ-திபெத் எல்லை படை ஆகியவற்றை சேர்ந்த 600-க்கு மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கம், 1,500 மீட்டர் நீளம் கொண்டது.

உள்ளே நுழைவதற்கு சுரங்கத்தில் சேர்ந்துள்ள சேறு, இடிபாடுகளை கனரக எந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 120 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்றி விட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை மீட்பு படையினர் சுரங்கத்துக்குள் நுழைந்தனர். முதலில், சேறுகளை துளையிட்டு, தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்ய திட்டமிட்டனர். ஆனால், துளையிட முடியாத அளவுக்கு மண் காய்ந்து இருந்தது.

உள்ளே இருந்து சேறும், தண்ணீரும் வந்து கொண்டிருப்பதால், முன்னேறி செல்வது சிரமமாக இருப்பதாக இந்தோ-திபெத் எல்லை படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒளிக்கருவி (கேமரா) பொருத்தப்பட்ட ‘டிரோன்’களை சுரங்கத்துக்குள் பறக்க விட்டு, தொழிலாளர்களின் இருப்பிடத்தை அறிய முயன்றனர். ஆனால், இருட்டாக இருந்ததால், காட்சிகள் எதுவும் தெளிவாக இல்லை. தொலை உணர் சாதனங்கள் மூலம் இருப்பிடத்தை அறியவும் முயன்று வருகிறார்கள்.

இன்னும் 100 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்றி விட்டால், தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அடைந்து விடலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், நேரம் செல்லச்செல்ல தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. அவர்களை காப்பாற்ற எல்லாவித முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாக காவல் துறை டி.ஜி.பி. அசோக்குமார் தெரிவித்தார்.

இதற்கிடையே, ரிஷிகங்கா நீா்மின் திட்டத்தில் பணியாற்றி காணாமல் போன சுமார் 40 தொழிலாளர்களின் குடும்பத்தினர் நேற்று ரெய்னி என்ற இடத்தில் ஒன்றாக திரண்டனர். நீர்மின் திட்ட அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 நாட்கள் ஆகியும், சாலை துண்டிப்பை சரி செய்வதில்தான் அதிகாரிகள் ஈடுபடுவதாகவும், காணாமல் போன தொழிலாளர்களை மீட்பதில் அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

அதற்கு நீர்மின் திட்ட மேலாளர் கமல் சவுகான், காணாமல் போனவர்களை கண்டறிய தனது உதவியை நிர்வாகம் ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »