Press "Enter" to skip to content

உத்தரகாண்டில் 30 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தில் துளையிடும் பணி தொடங்கியது

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கித்தவிக்கும் 30 தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி தொடங்கியது.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலக்நந்தா, தாலி கங்கா ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்த அனல்மின் நிலையம் அடித்துச் செல்லப்பட்டது. 34 பேர் பலியாகி உள்ளனர். 170 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

தபோவன்-விஷ்ணுகாட் நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் சேறும், தண்ணீரும், இடிபாடுகளும் புகுந்தன. இதனால் அதில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

தற்போதைய நிலவரப்படி, சுரங்கத்துக்குள் 30 முதல் 35 தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அவர்களை மீட்கும் பணியில் 450-க்கு மேற்பட்ட இந்தோ-திபெத் எல்லை படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர், ராணுவத்தினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் உறவினர்கள், ஏதேனும் நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்த்து சுரங்க வாயிலிலேயே காத்துக் கிடக்கின்றனர்.

சுரங்க வாயிலில் இருந்து 120 மீட்டர் தூரத்துக்கு சேறும், இடிபாடுகளும் அகற்றப்பட்டு விட்டன. மீட்புப்படையினர் நேற்று முன்தினம் உள்ளே நுழைந்தனா். தொழிலாளர்களின் இருப்பிடத்தை அறிய ஒளிக்கருவி (கேமரா) பொருத்தப்பட்ட ‘டிரோன்’களையும், தொலை உணர் சாதனங்களையும் பயன்படுத்தினர்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில், சுரங்கத்தில் துளையிடும் பணியை தொடங்கினர். கனரக எந்திரங்கள் உதவியுடன் துளையிடும் பணி நடக்கிறது. இன்னும் 12 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டால், தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் இடத்தை அடைந்து விடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

டன் கணக்கில் சேறுகள் குவிந்து கிடப்பதால், அந்த இடத்தை அடைவது எளிதாக இருக்காது என்பதால், முதலில் தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் வினியோகிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

சுரங்கத்தில் காற்றோட்டத்துக்கு வழி இருப்பதால், தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதே சமயத்தில், 5 நாட்களாக அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் இருப்பதால், மோசமான நிலையில் இருப்பார்கள் என்று கவலை எழுந்துள்ளது.

இதற்கிடையே, நேற்று பிற்பகலில் தாலிகங்கா ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்தது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுரங்கத்தில் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கனரக எந்திரங்களுடன் மீட்புப்படையினர் சுரங்கத்தில் இருந்து வெளியேறினர். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் அதிகாரிகள் பேட்டி அளிக்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

பின்னர், சில மணி நேரம் கழித்து, மீட்புப்பணி மீண்டும் தொடங்கியது. ஆனால், குறைவான வீரர்களே சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »