Press "Enter" to skip to content

கோவையில், நாளை 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். நடத்தி வைக்கிறார்கள்

கோவையில் நாளை 123 ஜோடிகளுக்கு நடைபெற உள்ள இலவச திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

கோவை:

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நாளை(15-ந்தேதி) 123 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதற்காக கோவை சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் செட்டிபாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் திருமண நிகழ்ச்சிகள் நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

தொடர்ந்து திருமண ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்களையும் வழங்குகிறார்கள். திருமணத்துக்காக வரும் திருமண ஜோடிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட உள்ளது.

கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, சூட்கேஸ், கேஸ் ஸ்டவ், குத்து விளக்கு, சில்வர்குடம், குக்கர் உள்பட சமையலறை பொருட்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட 73 வகையான சீர் வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

முன்னதாக இந்த திருமணத்தில் பங்கேற்க தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இலவச திருமணத்துக்காக முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் 73 ஜோடிகளுக்கு பதிலாக 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. நமது வீட்டில் யாருக்காவது திருமணம் நடத்தினால் உள்ளன்போடு எப்படி திருமணம் நடத்தி வைப்போமோ அதைப்போல இந்த திருமணங்களும் நடத்தி வைக்கப்படும் என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »