Press "Enter" to skip to content

தொலைத்தொடர்பு சாதன உற்பத்திக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஊக்கத்தொகை – மத்திய மந்திரிசபை ஒப்புதல்

தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்திக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்திக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் ரூ.12 ஆயிரத்து 195 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

அதன்மூலம், அடுத்த 5 ஆண்டுகளில், சுமார் 2½ லட்சம் கோடி மதிப்புள்ள தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட வழி பிறக்கும்.

இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக நிலைநிறுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா-மொரீஷியஸ் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திட மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போன்றது ஆகும். இதன்படி, இருவழி வர்த்தகத்தை ஊக்குவிக்க விதிமுறைகள் தளர்த்தப்படும். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.

இரு நாடுகளுக்கும் வசதியான தேதியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இளம் குற்றவாளிகள் நீதி சட்டத்தில் சில திருத்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு அதிகரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இளம் குற்றவாளிகள் நீதி சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர்களும், கூடுதல் மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அமைக்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »