Press "Enter" to skip to content

பிரதமர் மோடி 25-ந்தேதி வருகை: கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை:

பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி அரசு நிகழ்ச்சி மற்றும் பா.ஜனதாவின் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலையில் புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடி அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதனை முடித்து கொண்டு பிற்பகல் 3 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.

அங்கு அவருக்கு பா.ஜனதா சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை ஏற்று கொள்ளும் பிரதமர் மோடி தேர் மூலம் கொடிசியா அரங்கிற்கு செல்கிறார்.

அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு கீழ்பவானி திட்டத்திற்கு உட்பட்ட கால்வாய்களை மேம்படுத்துதல், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் உள்பட ரூ.960 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.

அரசு நிகழ்ச்சி முடிந்ததும் நேராக தேர் மூலம் பா.ஜனதாவின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்திற்கு செல்கிறார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றுகிறார். அதனை முடித்து கொண்டு இரவில் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னிட்டு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விழா முன்னேற்பாட்டு பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மோடியின் வருகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே மாநகருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர மாநகரில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் யாராவது இருந்தால் தகவல் கொடுக்கவும் அந்தந்த ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் அடிக்கடி சென்று சோதனை செய்து வருகின்றனர்.

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் நபர்கள், முன்னாள் குற்றவாளிகளையும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர மாநகர் முழுவதும் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ் நிலையங்கள், தொடர் வண்டி நிலையங்களிலும் வெடிகுண்டு நிபுணர் பிரிவு காவல் துறையினர் மூலம் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »