Press "Enter" to skip to content

காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டுகிறார்.

புதுக்கோட்டை:
 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்பட உள்ளது.

இந்த விழாவிற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் மருத்துவர்.சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், க.பாஸ்கரன், எஸ்.வளர்மதி மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »