Press "Enter" to skip to content

காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

காவிரி- தெற்கு வெள்ளாறு-வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

விராலிமலை:

தமிழத்தில் நீர்வள ஆதாரங்களை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து திட்டம் மூலம் அனைத்து குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டு அதன் மூலம் நிலத்தடி நீர்வள ஆதாரம் உறுதி செய்யப்படுகிறது.

அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவாகவும் இது இருந்து வருகிறது.

மழை வெள்ள காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் அதிக அளவிலான தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணையும் வெளியிட்டது.

காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூற்றாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்கு கட்டளைக்கால் வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ. நீளத்திற்கு கால்வாயை உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது. மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ நீளத்திற்கு கால்வாயை வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது.

ரூ.14,400 கோடியில் 262 கி.மீ. தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ. நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4,67,345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும்.

மேலும், காவிரி டெல்டாவிலுள்ள பழமை மிக்க பாசன கட்டுமானங்கள் ஸ்காடா தொழில்நுட்பம் மூலம் ரூ.72 கோடி மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காவேரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கப்படும்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள குன்னத்தூரில் நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அமருவதற்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர் வரவேற்றார். விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி- தெற்கு வெள்ளாறு-வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

முன்னதாக விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 8.27 மணிக்கு திருச்சி வருகை தந்தனர்.

விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர்கள் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஐ.ஜி. ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் முதல்வர் வாழ்க என்று கோ‌ஷம் எழுப்பினர். அவர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் தேர் மூலம் விழா நடைபெறும் குன்னத்தூர் சென்றனர்.

திருச்சியில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். மேலும் 1 லட்சம் விவசாயிகள் திரண்டு நின்று காவிரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் தப்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பாரம்பரிய வரவேற்பு அளித்தனர்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி மண்டல காவல் துறை ஐ.ஜி. ஜெயராமன் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »