Press "Enter" to skip to content

நாளை காலை இறுதி முடிவு: சட்டபேரவைக்குள் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்: நாராயணசாமி

புதுச்சேரி அரசியலில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், நாளை சட்டசபை தொடங்கும்முன் இறுதி முடிவு எடுக்கப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் அமைச்சரவையில் அங்கம் வகித்த நமச்சிவாயம், காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அமைச்சர் மற்றும் எல்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அ.ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புதுச்சேரியில் 30 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில், ஆளும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், காங்கிரஸ் கட்சிக்கு 16 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 2016-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வென்றிருந்தது.

அங்கு ஏற்கனவே ஒரு உறுப்பினரின் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில், கடந்த 18-ந்தேதி நிலவரப்படி காங்கிரஸின் பலம் 10 ஆக இருந்தது. அதன் கூட்டணியில் உள்ள திமுக 3, சுயேச்சை உறுப்பினர் 1 என கூட்டினால் ஆளும் கூட்டணியின் பலம் 14 ஆக இருந்தது.

அதே சமயம், எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக நியமன உறுப்பினர்கள் 3 பேர் என அந்த அணிக்கும் 14 உறுப்பினர்களின் பலம் உள்ளது.

அத்தகைய சூழலில்தான் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு அப்பதவிக்கு தெலங்கானா மாநில ஆளுநரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜனை குடியரசு தலைவர் நியமித்தார்.

இதையொட்டி புதுச்சேரியில் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணைநிலை ஆளுநர் பொறுப்பை தமிழிசை ஏற்ற சில மணி நேரத்தில், முதல்வர் நாராயணசாமி அரசு வரும் 22-ம்தேதி பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. வருகிற 21-ந்தேதி காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ., திமுக எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா செய்தார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம் முடிந்த பின் நாராயணசாமி கூறுகையில் ‘‘இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசித்தோம். இறுதி முடிவு எடுக்கவில்லை. நாளை காலை 10 மணிக்கு சட்டசபை கூடுவதற்கு முன் இறுதி முடிவு எடுக்கப்படும். என்ன நிலை எடுப்போம் என்பதை சட்டசபையில் தெரிவிப்போம்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »