Press "Enter" to skip to content

குஜராத்தில் 6 மாநகராட்சிகளுக்கு தேர்தல் – அமித்ஷா ஓட்டு போட்டார்

குஜராத்தில் 6 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஓட்டு போட்டார்.

ஆமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நேற்று மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது.

ஆமதாபாத், வடோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ்நகர் ஆகிய 6 மாநகராட்சிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 6 மாநகராட்சிகளும் பா.ஜனதா வசம் உள்ளன. ஜுனாகத் மாநகராட்சியில் 2 வார்டுகளுக்கு இடைத்தேர்தலும் நடந்தது.

மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 575. மொத்தம் 2 ஆயிரத்து 276 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பா.ஜனதா சார்பில் 577 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 566 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 470 வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ் உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.

தகுதி பெற்ற வாக்காளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சம் ஆகும். 11 ஆயிரத்து 121 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 2 ஆயிரத்து 255 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டன.

32 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதியோர் உள்பட ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

முக கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டன.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஆமதாபாத்தில் ஓட்டு இருக்கிறது. எனவே, அவர் அங்கு நாராணபுரா துணை கோட்ட அலுவலகத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். அவருடன் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் ஓட்டு போட்டனர்.

பின்னர், பக்கத்தில் உள்ள காம்நாத் மகாதேவ் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று அமித்ஷா வழிபட்டார்.

அதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையில் நாடு முழுவதும்பா.ஜனதா வெற்றி பெற்று வருகிறது. பா.ஜனதாவின் வெற்றிப்பயணம் தொடங்கிய குஜராத், பா.ஜனதாவின் கோட்டை என மீண்டும் நிரூபிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா எம்.பி. கிரித் சோலங்கி மற்றும் எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட்டனர்.

மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது.

நாளை (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வருகிற 28-ந் தேதி, 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 231 தாலுகா பஞ்சாயத்துகள், 81 நகராட்சிகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »