Press "Enter" to skip to content

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப அனுமதி- உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ‘கேங்மேன்’ பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்கள், இந்த அறிவிப்பாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

“ஏற்கனவே மின்வாரியத்தில் களப்பணி செய்ய ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களை நிரந்தரம் செய்யாமல் தற்போது புதிதாக ‘கேங்மேன்’ பணியிடத்தை உருவாக்கி தேர்ந்தெடுப்பது சரியான நடவடிக்கை இல்லை. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கேங்மேன் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் மின்சார வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், “அனைத்து விதிகளும் முழுமையாக பின்பற்றப்பட்டு, 70 சதவீத தேர்வு நடவடிக்கைகள் நிறைவு அடைந்துள்ளது. புதிதாக கேங்மேன் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தாலும், ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள்” என்று உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் எல்.சந்திரகுமார் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அரசு தரப்பு உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »