Press "Enter" to skip to content

இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜூக்கு ஊழல் தடுப்பு விருது – ஜோ பைடன் நிர்வாகம் கவுரவம்

இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேருக்கு ஊழல் தடுப்பு சாம்பியன் விருது அளித்து, அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் கவுரவிக்கிறது.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம், சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது என்ற பெயரில் ஒரு விருதை புதிதாக ஏற்படுத்தி உள்ளது.

இந்த விருதுக்கு இந்திய பெண் சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் (வயது 48) உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பெண் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் கூறுகிறார்.

இதையொட்டி அவர் கூறியதாவது:-

ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் வெற்றி பெறும் துணிச்சலான நபர்கள் மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தரங்களுக்கான தங்கள் கடமைகளை நிறைவேற்ற உழைக்கும் நாடுகள் உள்ளிட்ட உறுதியான கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதின் மூலம் மட்டுமே ஊழலை எதிர்ப்பதில் நாங்கள் வெற்றி பெறுவோம். இதைத்தான் ஜோ பைடன் நிர்வாகம் அங்கீகரிக்கிறது.

அந்த காரணத்துக்காக, ஊழலுக்கு எதிராக ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து, துன்பங்களை எதிர்கொண்டு, வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதற்காக, ஊழலை எதிர்த்து நின்று போராட, தங்கள் சொந்த நாடுகளில் பொறுப்பு கூற வைப்பதற்காக உழைப்பவர்களுக்கு நான் இந்த சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருதை அறிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்தியப் பெண் சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், டெல்லியில் சதார்க் நகரிக் சங்காதன் என்ற அமைப்பை நிறுவி உள்ளார். இந்த அமைப்பு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், பொறுப்பு கூற வைக்கவும், பொதுமக்களின் சுறுசுறுப்பான பங்களிப்பை ஊக்குவிக்கிறது.

மேலும் இவர் மக்களின் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய பிரசார குழுவின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். இந்த குழு, ஊழல் தடுப்பு ஆயம் மற்றும் ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் கொண்டு வர வெற்றிகரமாக வாதிட்ட குழு ஆகும்.

இந்த விருதுக்கு தேர்வு பெற்றிருப்பது குறித்து அஞ்சலி பரத்வாஜ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த விருது நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் குழுக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »