Press "Enter" to skip to content

தமிழகத்தில் 2-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ந்தேதி (நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே தொடங்கியது. இதையடுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதேவேளையில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதன் ஆதரவு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சென்னையில் பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு மின்சார தொடர் வண்டி நிலையங்கள் நோக்கி படையெடுத்துள்ளன. இதனால் அனைத்து மின்சார தொடர் வண்டி நிலையங்களிலும் பயணிகள் மிகுதியாகவே காணப்பட்டனர். அதேபோல மெட்ரோ தொடர் வண்டி நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் காரணமாக நகரத்து சாலைகளில் பகிர்வு ஆட்டோக்களும், கால் டாக்சிகளும் பாய்ந்து சென்றதை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் காத்திருக்கும் பயணிகளை கூவிக்கூவி ஏற்றி செல்வதில் பகிர்வு ஆட்டோ டிரைவர்கள் போட்டிக்கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது.

‘நிறைய பேருந்துகள் ஓடாது. வாங்க பகிர்வு ஆட்டோவில் போலாம்’, என்று டிரைவர்கள் உரிமையோடு அழைப்பதையும் கேட்கமுடிந்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »