Press "Enter" to skip to content

வைர வியாபாரி நிரவ் மோடிக்காக மும்பை சிறையில் சிறப்பு அறை தயார்

லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட உள்ள நிரவ் மோடியை அடைக்க மும்பை ஆர்தர் ரோடு சிறை தயாராக இருக்கிறது என சிறைத்துறை அதிகாரி கூறினார்.

மும்பை:

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து முறைகேடாக வாங்கிய கடிதத்தைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்தக் கடனை திருப்பி செலுத்தவில்லை. பின்னர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க லண்டனுக்கு தப்பிச் சென்றார். எனினும் இந்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு லண்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. எனவே அவர் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிரவ் மோடி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டால் அவர் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதற்காக அவருக்கு அங்கு சிறப்பு சிறை அறை தயாராக வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நிரவ் மோடி மும்பை கொண்டு வரப்பட்டால் ஆர்தா் ரோடு சிறையில் தான் அடைக்கப்படுவார். அவருக்காக அதிக பாதுகாப்பு அம்சம் கொண்ட 12-ம் எண் வளாகத்தில் 3 சிறை அறைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் ஒன்றில் அவர் அடைக்கப்படுவார். அவர் எப்போது நாடு கடத்தப்பட்டாலும் ஆர்தர் ரோடு சிறை தயாராக உள்ளது என தெரிவித்தார்.

ஆர்தர் ரோடு சிறையில் நிரவ் மோடிக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்த தகவலை மத்திய அரசு ஏற்கனவே மகாராஷ்டிரா சிறைத்துறையிடம் கேட்டு இருந்தது. இது தொடர்பாக மாநில அரசு வழங்கிய தகவலின் அடிப்படையில், நிரவ் மோடிக்கு 3 சதுர மீட்டர் சுற்றளவில் சிறையில் இடம் ஒதுக்கப்படலாம். படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை ஆகியவை வழங்கப்படும். இதேபோல சிறையில் தேவையான வெளிச்சம், காற்றோட்ட வசதி போன்றவை இருக்கும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே, நாடு கடத்தப்படுவதை எதிர்த்து நிரவ் மோடி 14 நாட்களுக்குள் லண்டன் உயர்நீதிநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா-இங்கிலாந்து இடையிலான நாடு கடத்தும் ஒப்பந்தப்படி, குற்றவாளியை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரிக்கு தான் அதிகாரம் உண்டு. அவர் 2 மாதங்களுக்குள் முடிவு எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »