Press "Enter" to skip to content

அதிமுக – தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை: சமரச உடன்பாடு ஏற்படுமா?

அதிமுக – தேமுதிக இடையே இன்று மாலை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்படுமா? என்கிற கேள்விக்குறியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் களம் விறுவிறுப்பு அடைய தொடங்கி இருக்கிறது.

வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 10 நாட்களே அவகாசம் உள்ளன. அதற்குள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை வெளியீடு ஆகியவற்றை முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், தி.மு.க. கூட் டணியும் தீவிரமாகி உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த கூட்டணியில் இடம் பெற்று உள்ள தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையாக 23 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. இடம் ஒன்று வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஆனால் தே.மு.தி.க.வின் இந்த நிலைபாட்டை அ.தி.மு.க. தலைவர்கள் ஏற்கவில்லை. தே.மு.தி.க.வுக்கு செல்வாக்கு குறைந்து இருப்பதாக கூறி 10 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தே.மு.தி.க. தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்குரிய தொகுதிகளை சீக்கிரமாக முடித்து தர வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. தலைவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பா.ம.க.வுக்கு தொகுதி பங்கீடு செய்த பிறகு தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

இதையடுத்து பா.ம.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்ததுடன் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சென்றனர். பிரேமலதா கட்சி நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் விஜயகாந்தை மட்டும் சந்தித்து விட்டு சென்றனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் தே.மு.தி.க. முன்னணி நிர்வாகிகளான பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் வரையே கொடுக்க முடியும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பார்த்தசாரதி, மோகன்ராஜ் இருவரும் தங்கள் தலைமையிடம் கலந்து ஆலோசித்து விட்டு கூறுவதாக தெரிவித்து விட்டு திரும்பினார்கள். இதுபற்றி பிரேமலதா, சுதீஷ் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பா.ம.க.வுக்கு இணையாக 23 தொகுதிகளை கட்டாயம் தர வேண்டும் என்றும் அதுபோன்று பேசுவதாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றும் தே.மு.தி.க. தரப்பில் அ.தி.மு.க.விடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தைக்கு தே.மு.தி.க.வினர் யாரும் செல்லவில்லை. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என் பதில் பா.ஜனதாவும் உறுதியாக இருந்தது. இது தொடர்பாக அமித்ஷா அ.தி.மு.க. தலைவர்களிடம் இன்று அதிகாலை தொலைபேசி வாயிலாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு இன்று காலை 7 மணி அளவில் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, எல்.கே. சுதீசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது தொகுதி பங்கீடு உடன்பாட்டில் உள்ள சிக்கல்களை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று தே.மு.தி.க. பேச்சுவார்த்தைக்கு செல்ல சம்மதித்தது.

இதன்படி இன்று மாலை அமைச்சர் தங்கமணியின் வீட்டில் வைத்து அ.தி.மு.க. – தே.மு.தி.க. இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் தே.மு.தி.க. நிர்வாகிகளான பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் இருவரும் பங்கேற்க உள்ளனர். தே.மு.தி.க.வுக்கு சாதகமான நிலை ஏற்பட வாய்ப்பு இருந்தால் இந்த பேச்சுவார்த்தையில் எல்.கே.சுதீசும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின்போது எப்படியும் பா.ம.க.வுக்கு இணையாக 23 தொகுதிகளை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் தே.மு.தி.க. தலைவர்கள் உறுதியாக உள்ளனர். அதே நேரத்தில் அ.தி.மு.க. தரப்பில் 23 தொகுதிகளை ஒதுக்குவதற்கு தயங்கும் நிலை தொடர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.

15 இடங்கள் வரை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்றைய பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்படுமா? என்கிற கேள்விக்குறியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பா.ஜனதாவுக்கு தொகுதிகளும் இறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் தே.மு.தி.க.வுக்கான தொகுதிகளை இன்று இறுதி செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.

அ.தி.மு.க. வட்டாரத்திலும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்கள். இதன் மூலம் இன்று மாலை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றிய விவரங்கள் தெரிய வாய்ப்புகள் உள்ளன.

இதன் மூலம் கடந்த 3 நாட்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12-ந்தேதி மனுதாக்கல் தொடங்க உள்ள நிலையில் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்குள் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் அ.தி.மு.க.வுக்கு அதிகரித்து உள்ளது. அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளிடையே நிலவும் தொகுதி பங்கீடு இழுபறியை முடிவுக்கு கொண்டு வர அ.தி.மு.க. தலைவர்கள் இரவு-பகலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »