Press "Enter" to skip to content

வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் முழு உடல் கவச உடை அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 19-ந்தேதி வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.

இந்தநிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு இன்று தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுதாக்கல் 12-ந்தேதி முதல் தொடங்குகிறது. சனி, ஞாயிற்றுகிழமைகளில் வேட்பு மனுதாக்கல் செய்ய இயலாது. மற்ற நாட்களில் அரசியல் கட்சிகள் மனு தாக்கல் செய்யலாம்.

பொதுமக்கள் ஆதார், டிரைவிங் லைசென்ஸ் உள்பட 11 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை 76 மையங்களில் நடைபெறுகிறது. தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணிநேரமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். அனைத்து தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

வேட்புமனுவை தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 2 பேர் செல்லவே அனுமதிக்கப்படுவர்.

கொரோனா காலத்தில் தேர்தல் நடைபெறுவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வாக்களிக்க வேண்டும்.

கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் முழு உடல் கவச உடை அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கு கையுறை அளிக்கப்படும்.

கொரோனா காலம் என்பதால் மின்னணு எந்திரத்தின் வழியாக தொற்று பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை சந்தித்து தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சனி, ஞாயிற்றுகிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாததால் 6 நாட்கள் மட்டுமே மனுதாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »