Press "Enter" to skip to content

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்

கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், தொடர் வண்டி பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. 

இதுவரை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8 லட்சத்து 80 ஆயிரத்து 910 பேர் குணமடைந்து உள்ளனர். 46 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் கொரோனா தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி விடாதது போன்ற காரணங்களால் சென்னையில் கொரோனா தாக்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். மற்றவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை சேர்த்துக்கொள்ள தயங்குவதால் பெரும்பாலான கொரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். 

அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக புதிய படுக்கை வசதிகளை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் தமிழக சுகாதார துறைக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், தொடர் வண்டி பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பிறகு கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. அதன்பிறகு கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. 

இந்த நிலையில் தற்போது சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அபாயகரமான அளவுக்கு மாறி உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் அது உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதார துறை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான சிகிச்சை உபகரணங்களை தயார் செய்வது மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதி, செயற்கை சுவாச வசதிகளுடன் கூடிய இடங்களை தயார் செய்வது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள கல்லூரிகளை மீண்டும் கொரோனா வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 11 ஆயிரத்து 875 படுக்கைகளை தயார் செய்யும் வகையில் கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற உள்ளன. வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் 400 படுக்கைகள் தயார் செய்யப்பட உள்ளன. மருத்துவர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில் 230 படுக்கைகளும், பாரதி பெண்கள் மகளிர் கல்லூரியில் 350 படுக்கை வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. 

அத்திப்பட்டில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 5,130 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விக்டோரியா ஹாலில் 570 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜவஹர் என்ஜினீயரிங் கல்லூரியில் 400 படுக்கைகள், கிண்டியில் உள்ள தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் 225 படுக்கைகள் தயார் செய்யப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறைகளில் 1,500 படுக்கைகள் உருவாக்கப்படுகின்றன. சென்னை ஐ.ஐ.டி.யில் 420 படுக்கைகள், குருநானக் கல்லூரியில் 300 படுக்கைகள், ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரியில் 500 படுக்கைகள், முகமது சதக் செவிலியர் கல்லூரியில் 900 படுக்கைகள் தயார் செய்யப்பட இருக்கின்றன. இதனால் இந்த கல்லூரிகள் முழுமையாக கொரோனா சிகிச்சை வார்டு மையங்களாக மாற உள்ளன.

இந்த மாத இறுதிக்குள் இந்த கல்லூரிகள் அனைத்தும் கொரோனா வார்டு சிகிச்சை மையங்களாக மாறி தயார் நிலையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

தென்னகதொடர்வண்டித் துறை மூலம் சுமார் 500 தொடர் வண்டி பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இதற்கிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு, வீடாக மருத்துவ பணியாளர்கள் வந்து சோதனை செய்யும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 மாநகராட்சி வார்டுகளில் 30 வார்டுகளில் மட்டும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் 52 தெருக்களில் 10-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். 210 தெருக்களில் தலா 6 நோயாளிகள் உள்ளனர். இந்த தெருக்களில் கண்காணிப்பு பணிகளும், கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதால் அதற்கு ஏற்ப மருத்துவர்களும், பணியாளர்களும் தேவைப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மருத்துவர்களை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 150 மருத்துவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வர உள்ளனர்.

இந்திய மருத்துவ கழகமும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கி உள்ளது. இந்தநிலையில் களத்தில் உள்ள சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »