Press "Enter" to skip to content

தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்

தற்போதுள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றினாலும் கூட நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால் மேலும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது.

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் இந்த மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதக்கூட்டங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், பேருந்துகளில் நின்று பயணம் செய்ய தடை, ஓட்டல், டீக்கடைகள், வணிக வளாகங்களில் 50 சதவீத அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த 10-ந்தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. பொது இடங்களில் எச்சில் துப்புதல், முககவசம் அணியாமல் சென்றால் அபராதம் போன்றவை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் களம் இறங்கினர்.

இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்படுகிறது. ஆனாலும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் பல மடங்கு அதிகரித்து வருவது சுகாதாரத்துறையினரை கவலை அடையச்செய்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அது பலன் அளிக்காததால் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போதுள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றினாலும் கூட நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால் மேலும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார துறை இணை இயக்குனர் செல்வ விநாயகம், வருவாய் துறை அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மேலும் பல அவசர நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்போடு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்படுகிறது.

மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைத்து துல்லியமாக கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்று விவாதிக்கப்பட்டது.

வார இறுதியில் ஊரடங்கு, இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பொது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது போல் இல்லாமல் சிறிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்படுகிறது.

மேலும் பாதிப்பு அதிகம் உள்ள 19 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த வகையிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாமா? அல்லது திட்டமிட்டபடி நடத்துவதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நேற்று நடந்த கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்தனர். இதில் பிளஸ்-2 தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »