Press "Enter" to skip to content

பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த காங்கிரஸ் சார்பில் ரூ.100 கோடி: சித்தராமையா அறிவிப்பு

மத்திய அரசு தனது வசதிக்கு ஏற்பட தடுப்பூசி வழிகாட்டுதலை மாற்றிக் கொள்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உட்பட்ட வயதினருக்கு தடுப்பூசி வழங்க ஆகும் செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பெங்களூரு :

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

கர்நாடகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எங்கள் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். எம்.எல்.சி.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி வீதம் ரூ.100 கோடி நிதியை தடுப்பூசி வினியோக திட்டத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி வழங்குவதன் மூலம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தற்போதைய காலக்கட்டத்திற்குள் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி வழங்கி இருந்தால் கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு பெரிய பலம் கிடைத்திருக்கும்.

மத்திய-மாநில அரசுகளின் பொறுப்புற்ற செயல்களால் மக்கள் இன்று தடுப்பூசிக்காக தெருவில் அலைகிறார்கள். தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு உயர்நீதிநீதி மன்றம், சுப்ரீம் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆயினும் பா.ஜனதா தலைவர்கள் பாடம் கற்றதாக தெரியவில்லை.

கொரோனா 3-வது அலை விரைவில் வரவுள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் கூறும் கருத்துகள் கவலை அளிப்பதாக உள்ளது. கோவிஷீல்டு முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி பெறுவதற்கான இடைவெளியை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

மத்திய அரசு தனது வசதிக்கு ஏற்பட தடுப்பூசி வழிகாட்டுதலை மாற்றிக் கொள்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உட்பட்ட வயதினருக்கு தடுப்பூசி வழங்க ஆகும் செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இது மத்திய அரசு தனது பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்வதை காட்டுகிறது. ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் மத்திய அரசே இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »