Press "Enter" to skip to content

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பொடி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள டிஆர்டிஓ மருந்து, கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் குறையவில்லை. தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

இந்நிலையில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கொனாரோவுக்கு எதிரான 2-டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது.  வாய்வழியாக உட்கொள்ளும் வகையில் பொடி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும்.

டிஆர்டிஓ ஆய்வகம் மற்றும் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட மருத்துவர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளன. இந்த மருந்தானது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவதுடன், ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையை குறைக்கிறது என பரிசோதனைகளில் நிரூபணமாகி உள்ளது. எனவே, அவசரகால தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

இதையடுத்து 2-டிஜி மருந்து டெல்லியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மருந்தை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். 

முதல்கட்டமாக 10000 மருந்து பாக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்த மருந்துகள் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் விரைவில் விநியோகம் செய்யப்படுகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »