Press "Enter" to skip to content

‘எமர்ஜென்சி’ விளக்கில் மறைத்து ரூ.1 கோடி தங்க கட்டிகள் கடத்தல்

‘எமர்ஜென்சி’ விளக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்:

துபாயில் இருந்து சென்னைக்கு ‘எமர்ஜென்சி’ விளக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது மங்களூருவைச் சேர்ந்த முகமது அரபாத் (வயது 24) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் ‘எமர்ஜென்சி’ விளக்கு ஒன்று இருந்தது. ஆனால் அது வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், ‘எமர்ஜென்சி’ விளக்கை பிரித்து பார்த் தனர்.

அதில் மின்கலவடுக்கு (பேட்டரி)க்கு பதிலாக தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது அரபாத்தை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »