Press "Enter" to skip to content

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் காலமானார்.

புதுச்சேரி:

பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ரா. ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார்.

தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். மறைந்த கி.ரா அவர்களுக்கு திவாகர், பிரபாகர் என இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 2019 செப்டம்பர் 25-ம் தேதி கி.ரா.வின் மனைவி கணவதி அம்மாள் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.

சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கியவர்.

சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது, கனடா நாட்டின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கி.ரா பெற்றுள்ளார்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை, என போற்றப்பட்ட எழுத்தாளர் கி.ராஜநாராயணன், வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர், தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் என்றழைக்கப்பட்டவர்.

தலைசிறந்த கதை சொல்லி எனப்போற்றப்பட்ட கி.ரா தள்ளாத வயதிலும் தளராமல் எழுதியவர் ஆவர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »