Press "Enter" to skip to content

அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல் – பச்சிளம் குழந்தை உட்பட 13 பேர் பலி

புயலை தொடர்ந்து ஏற்பட்ட சாலை விபத்தில் காப்பகத்தின் வேனில் இருந்த 4 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாஷிங்டன்:

அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்டது. இந்த புயல் காரணமாக பச்சிளம் குழந்தை உட்பட 13 பேர் பலியாகினர்.

காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன. அந்த வரிசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு தீவிர புயலாக வலுப்பெற்று அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்தது. இந்த புயலுக்கு கிளாடெட் என பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கிளாடெட் புயல் அலபாமா மாகாணத்தை தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று காரணமாக சுழன்றடித்தது.

இதில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின்கம்பங்கள் சரிந்தன; வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயல் காரணமாக அலபாமா மாகாணத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

புயலை தொடர்ந்து அலபாமாவில் பேய் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அங்குள்ள பல்வேறு நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது.

இந்தநிலையில் கைவிடப்பட்ட மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவர்கள் உள்பட பலருக்கு அடைக்கலம் அளிக்கும் காப்பகத்தை சேர்ந்த சிறுவர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று அலபாமாவின் மாண்ட்கோமெரி நகரிலுள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு எதிர்திசையில் வரும் வாகனம் தெரியாத அளவுக்கு அடைமழை (கனமழை) பெய்தது.‌ இதன் காரணமாக சிறுவர்களை ஏற்றிச் சென்ற வேன் முன்னால் சென்ற மற்றொரு வாகனத்துடன் திடீரென மோதியது. இதையடுத்து வேனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதின.

இப்படி 15 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் காப்பகத்தின் வேனில் இருந்த 4 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் ஒரு காரில் வந்த 29 வயது வாலிபரும், அவரது 9 வயது மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

முன்னதாக புயலின்போது அலபாமா மாகாணம் டஸ்கலோசா நகரில் வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்ததில் 3 வயது பச்சிளம் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அதேபோல் டெகால்ப் நகரில் வெள்ளத்தில் தேர் ஒன்று அடித்து செல்லப்பட்டதில் 23 வயதான இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இப்படி கிளாடெட் புயல் காரணமாக மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »