Press "Enter" to skip to content

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு நூலகத்துக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரியை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த காவல் துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அந்த மர்ம நபர் மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒருவர் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்து, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதற்கிடையில் துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அந்த மர்ம நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதால், காவல் துறையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த அந்த நபரை மீட்டு காவல் துறையினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »