Press "Enter" to skip to content

தடுப்பூசி செலுத்த ஆறு, காடுகளை கடந்து 40 கி.மீ. குழந்தையுடன் செல்லும் சுகாதார ஊழியர்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்தி உள்ளன.

ராஞ்சி: 

ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகிறார் மந்தி குமாரி. இவர் அருகிலுள்ள 8 கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். 

அடர்ந்த வனப்பகுதி மற்றும் ஆற்றைக் கடந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் இந்தக் கிராமங்களை அடைய முடியும். இவர் தனது குழந்தையை முதுகில் சுமந்தும், தோளில் தடுப்பூசிகள் அடங்கிய பெட்டியை சுமந்து கொண்டும் ஆற்றைக் கடந்து பணிக்கு செல்கிறார். இதுதொடர்பாக மந்தி குமாரி கூறியதாவது:

இது எனக்கு ஒன்றும் புதிதில்லை. இதற்கு முன்பும் இதுபோன்றே பணியாற்றியுள்ளேன். இப்போது பிரசவ கால விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தேன். அப்போது முதல் குழந்தையை முதுகில் சுமந்தபடி சென்று பணியாற்றி வருகிறேன்.

பல கிராமங்கள் இந்த ஆற்றைக் கடந்துதான் இருக்கிறது. இந்த ஆற்றில் ஆழம் குறைவு. மழைக்காலத்தில் இந்த ஆற்றைக் கடக்க முடியாது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்தக் கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு அவரவர் வயதுக்கான தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும். என் நெஞ்சுப் பகுதி வரை கூட ஆற்றுத் தண்ணீர் இருக்கும்போது தைரியமாகக் கடந்து விடுவேன். அதற்கும் மேல் உயரும்போது, இந்த கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் போய்விடும்.

ஒரு நாளைக்கு காடு, ஆறு என 40 கிலோமீட்டருக்கும் மேல் நடந்து செல்ல வேண்டியது வரும் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »