Press "Enter" to skip to content

கலாமுடன் ஓர் நெடிய பயணம்- விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

நம் நாடு மற்ற நாடுகளுக்கு மத்தியில் எப்போதுமே பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்திலும் வலிமையாக இருக்க வேண்டும் என்று றைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வைராக்கியம் கொண்டிருந்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம் இன்று.

பேராசிரியர், விஞ்ஞானி, ஜனாதிபதி என்று தான் வகித்த பதவிகளுக்கு புதிய இலக்கணம் வகுத்தவர், அப்துல் கலாம்.

அவரை போற்றும் இந்நாளில், அவருடன் பல ஆண்டுகள் விஞ்ஞானத்துறையில் ஒன்றாக பயணித்த மூத்த விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடந்த 1969-ம் ஆண்டில் தும்பா ஆராய்ச்சி நிலையத்தில் பணியில் நான் சேர்ந்தேன். அப்போது அங்கு ராக்கெட் என்ஜினீயராக அப்துல் கலாம் இருந்தார். பின்பு எஸ்.எல்.வி.-3 திட்டம் தொடங்கியபோது, அவரது அணியில் என்னையும் சேர்த்துக்கொண்டார்.

அப்போது இருந்தே நானும் அவரும் பல்வேறு இடங்களில், ஏராளமான பணிகளை ஒன்றாக செய்து இருக்கிறோம். அவரின் தம்பியாகவே இருந்துவிட்டேன்.

அவர் எப்போதுமே நம் நாடு மற்ற நாடுகளுக்கு மத்தியில் பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்திலும் வலிமையாக இருக்க வேண்டும் என்று வைராக்கியம் கொண்டிருந்தார்.

நம் நாட்டு இளைஞர்கள் உலக அரங்கில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்பதையே பேசிக்கொண்டு இருப்பார். அது மட்டும்தான் அவரது லட்சியமாக இருந்தது.

‘இந்தியா-2020’ என்ற கனவுத்திட்டத்தின் தலைவராக அப்துல் கலாம் இருந்தார். அதில் நான் முக்கிய பங்காற்றினேன். இந்தியாவை அனைத்து வளங்களும் பொருந்திய வல்லரசாக மாற்றும் பொருட்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

17 குழுக்களாக செயல்பட்டு இந்த திட்ட வரைவை கொண்டு வர 2 ஆண்டுகள் ஆனது. இதற்கு காரணகர்த்தாவாக கலாம் இருந்தார்.

இதற்காக வேளாண்மை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து 500 பேரை தேர்ந்தெடுத்து இந்த திட்டத்தை உருவாக்கினோம்.

இதை ஆங்காங்கே பல்வேறு குழுவினர் செயல்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் தலைவர் அப்துல் கலாம் தற்போது இல்லை என்றாலும், அவர் உருவாக்கிய திட்டம் எப்போதும் அவர் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும். அவர் ஜனாதிபதியான பின்பும் தினமும் இரவு 10.30 மணி அளவில் ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பேன். நீண்ட நேரம் பேசுவோம். அதன்பின்பு தான் இரவு உணவு சாப்பிடுவோம்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு மணி நேரம் அவருடன் ஜனாதிபதி மாளிகையின் முகல் தோட்டத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கிறேன். ஆனால் எங்களின் பேச்சுகள் அனைத்தும் நாட்டின் முன்னேற்றம் குறித்தும், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்ததுமாக மட்டுமே இருந்தது.

எந்த நாட்டுக்கு சென்றாலும் தனது தாய் நாடான இந்தியாவை பெருமைப்படுத்தி பேசுவதில் அவருக்கு நிகர் அவரே.

‘அணு ஆயுதத்தில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும். அதற்கான திட்ட வரைவை கொடு’ என்று கூறி, என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். நானும் முழு முயற்சி செய்து திட்ட வரைவை அவரிடம் கொடுத்தேன். அதன் வடிவம் தான், பிரமோஸ் ஏவுகணை திட்டம். இந்த திட்டத்தை ரஷிய நிறுவனத்துடன் இணைந்து செய்து முடிக்கும்படி கூறினார்.

அதன்படி ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் செல்லும் பிரமோஸ் ஏவுகணையை தயாரித்து, உலகிலேயே முதல் இடத்தை பிடித்தோம். இதுவரை அதை எந்த நாடுகளாலும் முறியடிக்க முடியவில்லை.

நாட்டின் கடைக்கோடியான ராமேசுவரம் தீவுப்பகுதியில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஒப்பற்ற தலைவராக உயர்ந்தார். பிறருக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »